துயரங்களுக்கு ஒரு தூரிகை

இந்திரன்


ஜூனியர் போஸ்ட், 22.1.1993


தஞ்சாவூரைச் சேர்ந்த புகழேந்தியின் ஓவியப்படைப்புகள் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவரது செதுக்கோவியங்கள் சூழலியல் பிரச்சினைகளைப் பேசுபவை. குடந்தை ஓவியக் கல்லூரி நாட்களில் செய்த ஓவியங்கள் ஈழப் பிரச்சினை பற்றிப் பேசுபவை. நுண்கலையில் முதுகலைப் பட்டப் படிப்புக்காக ஹைதராபாத் சென்ற பிறகு செய்த ஓவியங்கள் மதக்கலவரங்கள் குறித்துப் பேசுபவை.

உண்மையில் புகழேந்தியின் ஓவியங்கள், நவீன ஓவியத்தில் மக்கள் அக்கறை எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. உதாரணமாக, இன்று பாபர் மசூதி ராமர் கோயில் பிரச்சினை நாட்டைப் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. மனசாட்சி உள்ள அனைவரையும் பாபர் மசூதியின் இடிபாடு சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதே வகையான சங்கடம் ஓவியர் புகழேந்தியையும் எதிர்கொள்கிறது. அவரது தூரிகை இந்த அவலத்தை ஓர் ஓவியமாகப் படைக்கிறது. மதச் சின்னங்களாலோ, ஆடைகளின் வகைகளினாலோ இன்னமதம் என்று முடிவு செய்ய முடியாத நிர்வாண உருரம் ஒன்று இறந்து கிடக்கிறது. அதற்குப் பக்கத்தில் குருதி தோய்ந்த கத்தியுடன் மத அடையாளம் சொல்ல முடியாத இன்னொரு உருவமும் தீட்டப்பட்டுள்ளது. தூரத்தில் மசூதியின் கலசம், கோயிலின் கோபுரம் உள்ளன. மதக் கலவரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஓவியர் ஓர் ஓவியமாகத் தீட்டி இருக்கிறார்.

"சமுதாயத்தில் நான் ஒரு மனிதனாக மட்டுமல்லாது ஓவியனாகவும் இருப்பதால், என்னுடைய ஓவியங்களின் மூலம் மக்களின் அவலங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன்" என்று வெளிப்படையாகத் தெரிவிக்கிறார் புகழேந்தி.

பல நேரங்களில் புகழேந்தியின் ஓவியங்கள் சமூகப் பிரச்சினைகளை நேரடியாகப் பேசுவதில்லை. இவை கலை ரீதியான ஒரு குறியீட்டு மொழியில் அமைந்து விடுகின்றன.

குறிப்பாக அவரது 'துயரம்' எனும் ஓவிய வரிசையை எடுத்துக்கொண்டால் அதில் வேதனையினால் திணறும் மனித உருவங்கள் கலைநேர்த்தியுடன் தீட்டப்பட்டுக் காட்டப்படுகின்றன. நிர்வாண உருவங்கள், உடல்களின் கைவிரல்கள், பாதங்கள் போன்ற பகுதிகள் ஆகியவை தனித்தனியாகத் துண்டிக்கப்பட்டவையாகக் கித்தானில் காட்சி தருகின்றன. இந்த வரிசை ஓவியங்களில் உள்ள உருவங்களைப் பகிரங்கமாக நெளிந்தோடும் ஓரிரு கோடுகள் வெட்டிப் பிரிக்கின்றன. கித்தானுக்குள் பல துண்டுப் பகுதிகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் அபிநயங்களின் முக்கிய இடமான முகமே கத்தரிக்கோலால் வெட்டப்படுவது போல இந்தக் கோடுகளால் வெட்டிப் பிரிக்கப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அவலம் என்கிற உணர்ச்சி வேதனையைத் தெரிவிக்கும் ஓர் உளவியல் தளத்தில்தான் இயங்குகின்றன. இவரது பிற ஓவியங்களைப் போன்று சமூக அவலம் என்கிற ஒரு தளத்தில் மட்டுமே உழல்வது இல்லை.

அகில இந்திய இளைஞர்களுக்கான ஓவியக் கண்காட்சியில் பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன், தன் ஓவியத்தைப் பெரிதும் பாராட்டியதைப் பெருமையுடன் நினைவுகூரும் புகழேந்தியின் ஓவியங்களில் காணப்படும் உடல்கள் பெரும்பாலும் கரும்பழுப்பு நிற வண்ணத்தில் அமைபவை. இதன் மூலமாகப் பழுப்பு நிறத் தோல்களைக் கொண்ட தமிழர்களின் அடையாளத்தை இவர் தனது ஓவியங்களில் பதிக்கிறார். உடற்கூறு இயலை நன்கு புரிந்து கொண்டவராகச் செயல்படும் இவரது ஓவியப் படைப்புகள் ஓவியனுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளினால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அவரது ஓவிய வெளிப்பாடு அகவயமானதாக இருக்கிறது. எனவேதான், அவரது படைப்புகள் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும் அவரது கலைமொழி, புகழேந்திக்கே உரிய தனியான ஒரு மொழியாக இருக்கிறது.