| தமிழகத்தில் சமூக சிந்தனையுள்ள ஓவியர்கள் யார் இருக்கிறார்கள் என்றால் முதலில்  நினைவுக்கு வருவது புகழேந்தியின் பெயர்தான். அந்தளவுக்கு சமூகத்தோடு நெருங்கிய  தொடர்பும், அதை வெளிப்படுத்தும் கலைப் போராளியாகவும் அவர் இருக்கிறார்.
 
 தஞ்சை மாவட்டத்திலுள்ள தும்பத்திக்கோட்டை என்ற கிராமத்தில் விவசாயி  பெற்றோர்களுக்குப் பிறந்தவர் புகழேந்தி. இவரின் ஓவிய முயற்சிகளுக்கு இளமையிலேயே  உந்துதல் தந்தவர் ஆசிரியர் பசுபதிதான் என்கிறார்.
 
 பள்ளி இறுதி வகுப்பு முடித்து, ஓவியக்  கல்லூரியில் சேரவேண்டும் எனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது பெற்றோர்களிடம்  இருந்து எதிர்ப்பு கிளம்பியதாம். பிறகு தலைமையாசிரியர் தன் தந்தையைச்  சமாதானப்படுத்திய பிறகே கல்லூரிக்குப்போக அனுமதி கிடைத்ததாம். பின்னர் இளநிலைக்  கல்லூரி வகுப்பை, குடந்தை ஓவியக் கல்லூரியில் தொடங்கினார்.
 
 1987 ஆம் ஆண்டு  புகழேந்தியின் வாழ்வில் ஒரு திருப்புமுனை எனலாம். கல்கத்தாவில் மாணவர்களுக்குத்  தேசிய அளவில் ஓவியப்போட்டி நடந்தது. அதில் சுமார் 4000 இளம் ஓவியர்களிந் படைப்புகள் இடம் பெற்றன. உலகப்  புகழ்பெற்ற ஓவியரான எம்.எஃப். உசேன் புகழேந்தியின் 'பாதிக்கப்பட்டவன் 87'  (Victim) என்ற  ஓவியத்திற்குப் பரிசளித்தார். இது தவிர மிருணாள்சென், சப்னா ஆஷ்மி  முதலியவர்களும் தன் ஓவியத்தைப் பாராட்டியதை,  புகழேந்தி நினைவு கூர்கிறார். இந்த ஓவியத்திற்காக ரூ.7000 பரிசாகப்  பெற்றார். அதே கண்காட்சியில் இந்த ஓவியம் ரூ.5000 விலை போனதாம். இதே ஓவியத்திற்குச் சென்னையில் நடந்த கண்காட்சியில் மாநில  விருதும் ரூ.2000 பரிசாகப்  பெற்றார். அப்போது அவருக்கு  வயது பத்தொன்பதுதான்.
 
 பாதிக்கப்பட்டவன் 87, ஓவியம் இறந்து கிடக்கும் ஒரு மனிதனைச் சித்தரிப்பதாகும். பக்கவாட்டில் ஒரு  மனிதன் இறந்து கிடக்கிறான். அவன் உடலை மட்டும் ஒரு கோடு வெட்டிப் பிரிக்கிறது.  அக்கோட்டிற்கு வெளியே கை, கால்கள் இருக்கின்றன. அவனைச் சுற்றி வேடிக்கைப் பார்க்கும் கால்கள், செருப்புகள்  மற்றும் முழு ஓவியத்தை ஓவியர் இரு பகுதிகள் போல கித்தானில் பிரித்துக்  காட்டியுள்ளார்.
 
 இந்த ஓவியம் எதைச் சித்தரிக்கிறது? வறுமைக்குப் பலியானவரையா? அல்லது கலவரத்தில் பலியானவரையா? அர்த்தமில்லாத பகைக்குப் பலியானவரையா அல்லது ஏதோ ஒரு சமூகக் கொடுமையாயா என  நம்மைச் சிந்திக்க வைத்து தனது ஓவியம் மூலம் வெற்றி பெறுகிறார் புகழேந்தி.
 
 இந்த ஓவியத்தை ஏன் வரைந்தேன் என்று அவர் கூறும்போது, "நான் கும்பகோணம்  ஓவியக் கல்லூரியில் சேர்ந்தபோது ஒருநாள் என்னுடைய அறையிலிருந்து கல்லூரிக்குச்  சென்று கொண்டிருந்தேன். ஒரு வயதானவர் பட்டினியால் பிளாட்பாரத்தில்  படுத்திருந்தார். அவரை யாருமே கவனிக்கவில்லை. பிறகு மாலை 4 மணிக்கு மேல்  கல்லூரி முடிந்தபிறகு மீண்டும் அவரை நான் பார்த்தேன். அவர் இறந்து கிடந்தார். இந்த  நிகழ்ச்சி என்னை வெகுவாய்ப் பாதித்தது. அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.  அந்த நிகழ்ச்சியை நான் ஓவியமாகத் தீட்டினேன். அந்த ஓவியம் தான் பாதிக்கப்பட்டவன் 87 என்கிறார்.
 
 இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழேந்தி சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு  நிகழ்வையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அது அவரைச் சமூகத்தை நேசிக்க வைத்தது.  கொடுமைகளுக்கு எதிராக தூரிகையைத் துவக்காக மாற்ற ஆரம்பித்தார். இதற்கு இவரின்  புலப்பெயர்வும் ஒரு காரணம். குடந்தையில் இளநிலை ஓவியக் கல்வியை முடித்த புகழேந்தி  முதுநிலைப் படிப்பிற்காக, புரட்சித் தீ சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும் ஐதராபாத் மத்தியப்  பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
 
 ஆந்திராவைப் பொறுத்தவரை, ஒரு பக்கம் புரட்சி பெருக்கும், மறுபக்கம் மடமைப் புதைகுழிகளும் நிறைந்தது. புகழேந்தியைக் கொதிக்க வைக்கும்  நிகழ்ச்சி அப்போது நடந்தது.
 
 ஆந்திராவில் நல்கொண்டா மாவட்டத்தில் 'சலக்குருத்தி' என்கிற இடத்தில் 'ரெட்டி' எனப்படும் இந்த ஆதிக்கச் சாதியினர் பிற்படுத்தப்பட்ட ஒரு பெண்ணை நிர்வாணமாக  அழைத்துச் சென்றதைக் கேள்விப்பட்ட ஓவியரின் தூரிகை கோபத்தில் இயங்கியது. அதேசமயம்  திரைப்படம் நடந்து கொண்டிருக்கும்போது தாழ்த்தப்பட்ட ஒருவர் உயர்சாதிக்காரர்  ஒருவரின் காலை மிதித்து விட்டதால் சுண்டூர் என்ற ஊரில் சாதிக்கலவரம் வெடித்தது. பல  தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலையானார்கள். இதனால் மேலும் உக்கிரம் அடைந்த புகழேந்தி  அணிவகுப்பு (Parade) என்ற தலைப்பில்  பல தொடர் சித்திரங்களைத் தீட்டினார். அதில் ஓர் ஓவியத்தில் நிர்வாணமாக்கப்பட்டு, கைகட்டப்பட்ட பெண், தன் உடலை மறைத்து  நிற்கிறாள். அவளின் கூந்தலைப் பற்றி இழுத்துச் செல்கிறான் ஒரு நிலப்பிரபு. இந்தக்  காட்சியைக் கண்டும் மவுனிகளாக மக்கள் கூட்டம் இருப்பதைக் காட்ட, ஓவியத்தின் மேல்  பகுதியில் அவர்களின் வக்கற்ற தலைப்பகுதியும் பிளாஸ்திரி போடப்பட்ட வாயும்  காட்டப்பட்டுள்ளது. ஓவியத்தின் இடையில் செருப்பணிந்த, அணியாத கால்கள், இதன் மூலம் நவீன  ஓவியம் புரியாது என்பதை உடைத்துக் காண்பிக்கிறார்.
 
 நவீன ஓவிய உலகத்தைப் பொறுத்தவரை, தனிமையில் இருந்து யாருக்கும் புரியாத விதத்தில் சமூகத்துடன் அந்நியப்பட்டு  வரைந்த ஓவியங்கள் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டலில் கண்காட்சிக்காக  வைக்கப்படும். அந்த நகரத்தின் பணமுதலைகள் வந்து தங்கள் திமிரைக் காண்பிப்பதற்காக  அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வதும், அந்தப் படைப்பைப் பற்றிய அறிவே இல்லாமல் அதை வீட்டில் முடக்க  வைப்பதுமே வழக்கம். இதைப் புரட்சிகர ஓவியர்கள்  முறியடித்து வந்துள்ளனர். இந்த வழக்கத்தை எதிர்த்து நரசிங்கராவ் என்ற கலைஞன் தனது  திரைப்படமான 'ரங்குல கலா' (வண்ணக்கனவு)வில் கதாநாயகனான ஓவியன் தனது ஓவியங்களை நகரத்தின் மையத்திலுள்ள  பாலத்தின் மேடையில் காட்சிக்கு வைத்திருப்பார். பொதுமக்கள் வந்து தங்கள் கருத்தைக்  கூறுவார்கள்.
 
 ஆந்திராவில் இருந்ததாலோ என்னவோ புகழேந்தி இந்த வகைப்பட்ட முறையில் தமிழகத்தில்  தனது கண்காட்சியை நண்பர்கள் ஒத்துழைப்புடன் நடத்தினார்.
 
 அப்போது காவிரி நதி நீர்ப்பிரச்சினையால் பல்லாயிரம் தமிழர்கள்  கர்நாடகத்திலிருந்து அகதிகளாகச் சொந்த நாட்டிலே சோகத்தை அனுபவித்த கொடுமையை இவரின்  ஓவியங்கள் சித்திரித்தன. இந்நிகழ்வைத் தஞ்சைப் பெரிய கோவிலை அடுத்துள்ள இராசராசன்  சிலையருகிலுள்ள பூங்கா நடைபாதையில் ஸ்டீல் நாற்காலிகளின் மேல் ஓவியங்களை வைத்தும்  தற்காலிக ஆர்ட் காலரியை உருவாக்கினார்.
 
 ஐதராபாத்தில் 91இல் நடைபெற்ற மதக்கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இதைக் கண்டித்துக்  கலைஞர்கள் மதவாதத்திற்கு எதிராகக் 'கலைஞர்கள்' என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஓவியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், நாடக சினிமாக் கலைஞர்கள் பலரும் பங்கு கொண்டனர். இதில் புகழேந்தியும் கலந்து  கொண்டு தனது படைப்பை இடம்பெற வைத்தார்.
 
 இதுதவிர இவரது படைப்புகள் ஆர்மீனிய பூகம்பம்; நெல்சன் மண்டேலா; சமாதானம் பற்றிய மத்திய அரசி மாநில அரசுகளை எவ்விதக் காரணமும் காட்டாமல்  கவிழ்க்கும் 356 ஆம் சட்ட எண்ணைக் காட்டி ஒடுக்கும் ஜனநாயக விரோதத்தைக் கண்டித்தும் தொடர்  ஓவியங்கள் படைத்தனர். ஈழப்படுகொலையைக் கண்டித்து அந்தோனிதாஸ், சாம் அடைக்கலசாமி, வீர.சந்தானம்  வரிசையில் புகழேந்தியும் பல எதிர்ப்பு ஓவியங்களைப் படைத்துள்ளார்.
 
 இவரது ஓவியங்களில் காணப்படும் சமூகப் பாதிப்புகளின் பிரதிபலிப்பாக அகில  இந்தியப் பரிசு, நுண்கலைக் குழு விருது, மற்றும் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அத்தாரிட்டி விருதையும் பெற்றவர். இவரது  ஓவியங்கள் சென்னை, பாம்பாய், கல்கத்தா, லக்னோ, பெங்களூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
 
 புகழேந்தியின் ஓவியங்கள் தமக்கெனத் தனி இயல்பைக் கொண்டு விளங்குகின்றன. இது  இவருக்கான புதிய பாணியை வகுத்துத் தந்துள்ளது.
 
 இவருடைய பாதிக்கப்பட்டவன், பலி, வரிசை ஓவியங்கள் அனைத்தும் முறுக்கேறிய உழைப்பாளிகளின் உடல்கள், தனிவெட்டுக்  கோட்டுக்குள் அடக்கும் தன்மை, உருவங்ளைத் தனக்கேற்பச் சிதைக்கும் லாவகம்,  கித்தானை இருபிரிவாகப் பிரித்துக்கொள்ளும் போக்கு  முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டு தனிபாணி ஏற்படுத்தியுள்ளன.
 
 அணிவகுப்பு, சுண்டூர் படுகொலை போன்ற தொடர்ச் சித்திரங்களில் சிவப்பு, பழுப்பு, நீலம், வெள்ளை முதலிய  நிறங்களைக் கொண்டும் முழு உருவச் சித்திரிப்பும் செய்துள்ளார். இது இரண்டாவது  பாணி.
 
 புகழேந்தியின் மூன்றாவது பாணி ஓவியங்களாக ஈழப்படுகொலை, காவிரி நீர்ப்  பங்கீடு, மதவாதம் முதலிய தொடர் சித்திரங்களில் சிகப்பு மற்றும் பழுப்பு வண்ணங்களை  அதிகமாகவும் வெள்ளை நிறத்தைக் குறைத்தும் வெள்ளை நிறத்தை அலறும் பற்கள் மூலமும், கொலையாளிகளின்  கருவிகள் மூலமும் வெளிப்படுத்துகிறார். இந்தப் பாணி ஓவியங்களின் கித்தான்கள்  செவ்வக வடிவிலும் நிறைய காட்சி சித்திரிப்புகளையும் கொண்டவையாகக்  காட்சியளிக்கிறது.
 
 இதுதவிர இந்தியன் இங்கினால் வரையப்படும் கோட்டுச் சித்திரங்கள் அனைத்தும்  தமிழகத்திற்கே உரித்தான ஆதிமூலம், மருது, சந்தானம் ஆகியோரின் ஓவியச் சாயலில் இவரின் கோடுகளும் இயங்குகின்றன.
 
 புகழேந்தி தனது ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது "என் படங்களைப்  பார்த்த ஒருவர் சொன்னார், உங்க படங்களை வாங்கி வீட்டுச் சுவரில் அங்கரிக்க முடியாது போலிருக்கிறதே  என்று. நானும் முதலில் அழகுணர்ச்சியால் உந்தப்பட்டுக் கிராமத்துக் காட்சிகளை  வரைந்து கொண்டிருந்தேன். பின்னர் அங்குள்ள அவலங்களும் மக்கள் படுகிற கஷ்டங்களும்  என்மனதை வருத்தத் தொடங்கியது. அதன் பிறகுதான் சமுதாயத்தைப் பாதிக்கும்  பிரச்சினைகளை, சோகங்களை அடிப்படையாக வைத்து வரைய ஆரம்பித்தேன்."
 
 "ஓவியனும் ஒரு  பத்திரிகை நிருபர் மாதிரிதான். சப்ஜெக்டோடு நேரடியான ஈடுபாடு தேவைப்படுகிறது. யாரோ  சொல்லுகிற நிகழ்ச்சியை வரைவதைக் காட்டிலும் அந்த இடத்திற்கே போய் நிலைமையை  உணர்ந்து வரைவதில்தான் திருப்தி கிடைக்கும். என்னுடைய ஓவியங்கள் மாளிகைகளை  அலங்கரிக்கும் கலைப்பொருட்கள் இல்லை. நடைபாதைகளில் இவற்றை மாட்டும் பொருட்கள்  இல்லை. நடைபாதைகளில் இவற்றை மாட்டும் போது தான் சொல்ல வந்த விஷயத்தைச் சேரவேண்டிய  இடத்தில் சேர்ப்பித்த திருப்தி கிடைக்கிறது" என்கிறார் இந்த 27 வயது ஓவியர்.
 
 சிட்டப்பிரசாத், தேப்ராட்டா, பாட்டாச்சாரியா போன்ற புரட்சி ஓவியர் வரிசையில் இந்திய மக்களின்  போராட்டங்களுக்கு ஓவியர் புகழேந்தியின் கலைவெளிப்பாடுகள் உறுதுணையாக இருக்கும்  என்று நிச்சயம் நம்பலாம்.
 |