சிறந்த கலையின் அடையாளம் என்ன? ஸ்தூலத்திலிருந்து அது சூட்சுமத்தை நோக்கி வியாபிப்பது. குறிப்பானதிலிருந்து சர்வாம் சமானதாகப் பரிணமிப்பது கணம் தோன்றி மறையும் காலத்துளியிலே முக்காலத்தையும் காட்டும் வித்தை அது. டோமியரின் 'ட்ரான்ஸ்னோனியன்' ஏப்ரல் 15, 1834 ஆயினும் சரி, பிக்காசோவின் குவர்னிகா ஆயினும் சரி, இதுதான் உண்மை.
வரலாற்றுக் காலத்தின் ஸ்தூலமான ஏதோ ஒரு புள்ளியிலிருந்துதான் கலை தன் ஜீவ சத்துக்களை உறிஞ்சி எடுக்கும். ஆனால் கால வளர்ச்சியில் அது தன் தொப்பூள் கொடியை அறுத்துக் கொண்டு, தனித்த வாழ்க்கையைத் தொடங்கும். தன் படிமக் கட்டமைப்பின் சிறப்புத்தன்மையால் அதனுள்ளே உயிர் வளர்ந்து, ஒவ்வொரு காலத்திலும் இருந்து தனக்கு வேண்டிய புதிய புதிய சத்துக்களை உறிஞ்சி, புதுப்புது அர்த்தங்களைப் பூத்துக்கொண்டே போகும்.
புகழேந்தி தன் 'எரியும் வண்ணங்களில்' சில ஸ்தூலமான வரலாற்றுச் சம்பவங்களைத்தான் பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவை பெற்றிருக்கும் வடிவ முழுமையின் காரணமாக, வரலாற்று ஸ்தூலத்தன்மையை மீறி, வியாபிக்கும் சூட்சுமத் தன்மையும் பெற்றுள்ளன.
பல ஓவியங்களில் இந்த ஆற்றல் அருமையாக வாய்த்திருக்கிறது. இலங்கையில் நடக்கும் இனக்கொடுமையையும், இந்தியாவில் நடக்கும் சாதிய அரசியல் கால எல்லைகளை மீறி, உலகெங்கும் நடந்துவரும் சாதிக்கொடுமை, பாலியல் கொடுமை, இனக் கொடுமை, அதிகாரக் கொடுமை ஆகியவற்றின் பொதுப் படிமங்களாகப் பரிணமித்துள்ளன.
பெரும்பாலும் புகழேந்தியின் ஓவியங்களில் நாம் பார்ப்பது சிதைக்கப்பட்ட மனித உடல், சோர்ந்து, தளர்ந்து, சருகாகிப்போனது அல்ல இந்த உடல். உறுதியான எலும்புக் கட்டும், வீரியமான குருதி ஓட்டமும் கொண்ட வலுவான உழைப்பாளி உடல் அது. இவைகளைச் சிறைப்படுத்தியிருப்பதும், சிதைத்திருப்பதும் ஒரு கம்பி வளையம். ஒரு கோணத்தில் சிங்களப்பேரினவாத அடக்கு முறையாகப் பொருள் தரும் இந்த வளையம், ஜாதீய அடக்குமுறை வளையமாக, பாலியல் வன்முறை வளையமாக, சுரண்டல் வளையமாக, இயற்கைச் சீற்ற இடர்ப்பாட்டு வளையமாக, வகுப்புவாத வளையமாக... இன்னும் எத்தனையோ புதுப்புது பொருள் தருகிறது.
'மானுடன்' என்ற ஓவியத்தில் புதிய நம்பிக்கையின் குறியீடுகளாக வெண்புறாக்கள் போல உட்கார்ந்திருக்கும் ஒரு சோடிச் செருப்பு, புகழேந்தியின் கலை நுட்பத்தின் அற்புதமான சாட்சி.
அதுபோல, பெண்ணின் மார்பகங்களை அறுத்து விளையாடும் ஒரு ஜோடிக் கைகள். அவை ஒன்றுக்கொன்று வேறுபட்ட கைகளாக அமைந்திருப்பது இன்னொரு நுட்பம். பேரினவாத வெறியின் கை ஒன்றானால், பாலியல் வக்கிரத்தின் கை மற்றது.
அவருடைய அகதிகள்? அவர்கள் இலங்கை அகதிகளா? அல்லது கொடியங்குளம் அகதிகளா? அல்லது பெல்சிய அகதிகளா? எல்லாரும் தான்.
தமிழில் வெளிவந்துள்ளன இந்த முதல் ஓவிய நூலின் இன்னொரு சிறப்பு அதில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளும், குறிப்புகளும், கடிதங்களும், கலையும் எதார்த்தமும் ஒன்றுக்கொன்று நேர்பட அமைந்திருக்கக் கூடாது என்று விமர்சகர்கள் சொல்ல, ரசிகர்களோ அவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நுட்பமாகக் கவனிக்க வேண்டியது. ஒடுக்கப்பட்ட மனிதனின் போராட்ட உணர்வுகள் இன்னும் தூக்கலாக வெளிவர வேண்டும் என்ற குரலும் வரிகளின் ஊடே எங்கோ கேட்கிறது.
இந்தியா போன்ற எழுத்துப்பழக்கம் அதிகம் இல்லாத தேசத்தில் ஓவிய நூல்களின் பயன் அதிகம். எழுத்தறிவு இல்லாத பகுதியினரும் சமூகத்தின் மீது அக்கறை கொள்ள, சமூகக் கொடுமைகளின் மீது அவர்களின் கோபத்தைத் திருப்ப, மனித லட்சியங்களில் அவர்கள் மேலும் தீவிரம் கொள்ள, இவை பெரிதும் உதவும். மாபெரும் கலைஞனாக சர்வதேசப் புகழ்பெறுவது முக்கியமானதுதான். அதேசமயம், கலைஞனின் படைப்புகள், தன் மக்களுக்கு ஆத்மார்த்தமாகத் தொண்டு செய்யவேண்டும் என்பதும் அதே அளவுக்கு முக்கியமானதே.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், முதல் லட்சியத்தைவிட இரண்டாவது லட்சியமே அதிகம் முக்கியமானது என்பது என் கருத்து. இந்த அம்சத்தில் புகழேந்தி என் பக்கம் நிற்கிறார் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஓவியர்களுக்கு மட்டுமல்ல, கலை இலக்கிய ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த நூல் நல்ல விருந்து. தமிழில் முதல் ஓவிய நூல் என்ற வகையில் ஒரு நல்ல தொடக்கம் கூட. இன்றைய சிறப்பு ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எனப்பலர்கூடி, நிதி திரட்டி, நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள் என்கிறபோது தமிழ்க்கலை இலக்கிய எதிர்காலம் பற்றிய நம்பிக்கை மேலும் பெருகுகிறது. புகழேந்திக்கு மட்டும் அல்ல; அவருக்கு உதவிய எல்லாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
|