கோடுகள் என்பவை பூமியின் கற்பனையான அட்சரேகை, தீர்க்க ரேகைகளாகவும் ஓவியங்களின் தூரிகைத் தீற்றல்களாகவும் மட்டுமே நீடிக்க வேண்டும். எல்லைகளாக மனிதரைப் பிரிக்கிற பூகோள வரைபடக் கோடுகள் மறைய வேண்டும் என்றொரு ஏக்கம் எனக்கு உண்டு. உலகத்தை, உயிர்களை நேசிக்கிற கலை வெளிப்பாடுகள் எல்லாம் அதையே இலக்காகக் கொண்டிருப்பதாகக் கருதுபவன் நான். அடக்குமுறை பண்பாட்டுச் சர்வாதிகாரங்களை எதிர்த்து, சொந்த அடையாளங் களை நிலைநிறுத்துவதற்கான போராட்டப் படைப்புகளும்கூட மனிதர்களை தனிமைப் படுத்துவதற்காக அல்ல. சட்டாம்பிள்ளைத்தனங்கள் இல்லாத சமத்துவத்துக்காகவும் சம உரிமைக்காகவும் குரல்கொடுப்பவைதான் - உண்மையில் கூறுபோடும் கோடுகளை அழிப்பதற் காகத்தான்.
பொருளாதாரம், சமூகம், மதம், சாதி, இனம், மொழி, அரசியல் எனப் பலப்பல வகைகளில் அடக்குமுறைக் கோட்பாடுகள் வரையப்பட்டுள்ளன. அந்தக் கோடுகளை அழிப்பதற்கு புறப்பட்ட கலைக்கோடுகளில் ஒன்றுதான் ஓவியர் கு. புகழேந்தியின் "அதிரும் கோடுகள்." ஏற்கெனவே நிறுவப்பட்ட பேதச் சட்டங்களைத் தகர்ப்பதற்கான கோடுகள் அதிர வைக்கத்தானே செய்யும்.
"ஓவியத்தின் அடிப்படை கோடுகளே. கோடுகள் வடிவங்கள் உருவங்களாய், உருவங்கள் உணர்ச்சிகளாய் மாறுகின்றன. தன் காலத்தைப் பதிவு செய்யும் அதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓவியங்கள் காலம் கடந்தும் நிற்கின்றன" என்று பதிப்பாளர் மணிபாரதி குறிப்பிடுவதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ ஓவியங்கள் உள்ளன. அவை காலத்தைக் கடந்தவை மட்டுமல்ல, தாங்களே ஒரு காலமாக அடையாளம் பெற்றவையும்கூட.
கண்காட்சிகளுக்கு வரக்கூடிய ஒருபகுதிப் பார்வையாளர்களின் ரசனையோடு நின்றுவிடாமல் தனது ஓவியங்களைப் புத்தகங்களாக கொண்டுவந்து கால வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடும் புகழேந்தியின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏற்கெனவே இவரது 'எரியும் வண்ணங்கள்', 'திசை முகம்', 'உறங்கா நிறங்கள், 'முகவரிகள்' ஆகிய நூல்களின் வரிசையில் இப்போது அதிரும் கோடுகள் இணைந்து காலத்தை வெல்லும் முயற்சியில் மேலும் ஒரு வலுவான அடிவாரமாகிறது.
கோட்டோவியங்களாகவே படைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான உணர்வை வெளிப்படுத்துகின்றன. முதல் ஓவியமே பேனாமுனையாக மாறுகிற ஒரு துப்பாக்கியை ஏந்தியிருக்கும் மனிதனைச் சித்தரிக்கிறது. எளிமையும் கற்பனையும் கலந்த இந்த ஓவியம் யோசிக்க யோசிக்க ஆழமான பொருளைத் தருவது உணர்ந்து பார்க்கப்பட வேண்டியது.
பல ஓவியங்கள் ஆடையற்ற மனிதத் தோற்றங்களைச் சித்தரிக்கின்றன. ஆடை வாங்குவதற்காக நிர்வாணத்தை விற்க நேரிடும் சமூகச் சூழல் பற்றிய ஆவேசத்தை இந்த ஓவியங்கள் கிளறிவிடுகின்றன. இன்னொரு கோணத்தில் உண்மையான உணர்வுகளைப் போலியான ஆடைகளால் மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்கிற படைப்பு நேர்மையாகவும் அமைந்துள்ளன.
மனித உடலுக்குள் பதுங்கியிருக்கும் மிருக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓவியங்களும் உண்டு. பூட்டை உடைத்துக்கொண்டு சிறைக் கம்பிகளைச் சிதறடித்து, பறக்கிறது ஒரு பறவை. அந்தப் பூட்டும் சிறைக் கம்பிகளும் உடைக்கப்பட வேண்டிய சமூக நியதிகளை அடையாளப்படுத்துகின்றன என்று சொல்ல வேண்டியதில்லை. பெண்ணின் விடுதலைக் குரல், செயற்கை அழிவுகளை மீறி மீண்டும் மீண்டும் மனிதர்களுக்கு நன்மையே செய்யத்துடிக்கும் இயற்கையின் வெளிப்பாடாய்த் துளிர்க்கும் இலைகள் என்று மேலும் பல சித்தரிப்புகள்.
1994லிருந்து இவ்வாண்டு (2004) ஜூன் மாதம் வரை செய்யப்பட்ட தமது ஆயிரக்கணக்கான கோட்டோவியங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தொகுப்பாக இதனைக் கொண்டு வந்துள்ளார் புகழேந்தி. வண்ணங்கள், சிக்கலான நுட்பங்கள் முதலியவை இல்லாமலே அதேநேரத்தில் சிந்திப்பதற்குத் தூண்டும் வகையிலும் ஓவியங்கள் அமைந்துள்ளது சிறப்பு "என்னுடைய வெளிப்பாடுகளுக்கு நிறங்களை எப்படி வலிமைமிக்க ஒன்றாய்க் கருதுகின்றேனோ அதேபோல் கோடுகளையும் கூர்மையானதாக நம்புகிறேன்" என்று தமது முன்னுரையில் அவர் கூறியிருப்பதை ஒவ்வொரு பக்கமும் மெய்ப்பிக்கிறது.
இந்தப் புத்தகத்தால் வாசகருக்கு என்ன பலன்? ஒன்று, கதைகளுக்கும் கவிதைகளுக்குமான பக்கவாத்தியங்களாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த ஓவியங்கள் இதில் தனித்துவமாக அமைந்துள்ளன. இது ஒரு இலக்கியப் படைப்பை ரசிப்பது போல ஓவியப்படைப்பிற்குள்ளும் நுழைந்து லயிப்பதற்கு உதவுகிறது. அடுத்து உணர்வுகளை வெளிப்படுத்த இப்படியும் ஒரு வடிவம் இருக்கிறது என்ற புதிய சிந்தனையையும், நாமும் இதேபோல் முயலலாம் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது.
இனிவரும் இலக்கியப் படைப்புகளுக்கும் விவாதக் கட்டுரைகளுக்கும் ஒரு துணையாக இந்த ஓவியங்கள் உடன்வரும் என்பது படைப்பாளிகளுக்கான ஆதாயம். ஓவியங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற சில பழைய சிந்தனைகள் உதிரும் நிலையை உருவாக்கும் புதியதொரு பூகம்பமாக அதிர்கின்றன இந்தக் கோடுகள்.
|