"தான் வாழ்ந்த காலத்தில் இசையைத்தவிர வேறெதிலும் கருத்துச் செலுத்தாதவர் அவர்" என்று இசைக்கலைஞர் ஒருவர் பற்றிய வாசகம் நினைவுக்கு வருகிறது. இசையைக் கலையாகக் கொண்டவருக்கு மட்டுமல்ல, எழுத்து, இலக்கியம், ஓவியம், நாட்டியம், பாட்டு, கூத்து என எத்துறைக் கலைஞராக இருந்தாலும் அதன்பொருட்டு வாழ்நாளை ஒரு துளி மிச்சமில்லாமல் செலவழிப்பதைப் பொறுத்து அவரது ஆளுமை உயரம் கூடுகிறது.
கரிசல் சீமை என்று சொல்லப்படுகிற தெற்கு வட்டாரத்தில், குறிப்பாய் எங்கள் வளைசலில் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி நிறைய சொல்வார்கள். மழை பெய்கிறபோது முன் தாழ்வாரத்தை விட்டு நீங்கமாட்டார். மழை பேசுவது போலவே ஏற்ற இறக்கமாய் அதனோடு இணைவாய்ப் பயணம் போவார். மழை இடிகொண்டு முழங்குகிற வேளையில் திடும் திடும்; அமைதியாய் பெய்தால் அமைதி வழிதல், தொண்டையை விரித்து, சுருக்கி, நீட்டி, சிக்கலாக்கி, மழையின் பல தோரணைகளில் பண்ணுவார். மழை பெய்து முடிந்த இரவில் கம்மாய்க் கரையோரம் உலாத்தல், தவளைகளின் கத்தல், முழக்கத்தினூடாக அதற்கு ஈடாக குரல் தந்து கொண்டே போவார். சரியான கோடிக்காரனா (பைத்தியம்) இருப்பாம் போல என்று அவர் செய்வதையெல்லாம் காணுகிறபோது தோன்றும். இசைத்துறையில் மிகப்பெரிய ஆளுமை என்று சொல்லப்பட்ட கே.பி. சுந்தரம்பாள், விளத்திகுளம் சுவாமிகள் இருப்புக் கச்சேரி (இசைநிகழ்ச்சி) செய்கிறபோது, முன்வரிசையில் தலையாட்டிக் கேட்டபடி கிறங்கிப் போவார் என்று சொல்கிற சொல், இந்தப் பைத்தியக்காரத்தனமான காரியங்களுக்குள்ளிருந்து வளர்த்துக் கொண்டு ஆலுமையால் கிடைத்தது.
மேற்கூறப்பட்டவை அனைத்தும், கற்றறிவுள்ள, பாரம்பரிய வழிபட்டவர்கள் கையாண்டு வருகிற செவ்வியல் கலைகளாக உள்ளன. இக்கலைகளைப் பற்றி மற்றவருக்கு எடுத்துரைத்துத் தொடர்பு படுத்தும் கல்வி இன்னும் மேன்மக்கள் வசமே முற்றுமுழுக்க அகப்பட்டுள்ளது. இக்கலைகளிலிருந்து தாண்டி அல்லது இக்கலைகளுக்கு எதிர் நிலையில் தன்னுடைய கம்பீரத்தைக் காட்டிவருகிற நாட்டுப்புறக் கலைஞர்களும் தன் வாழ்காலத்தினை அதற்காக ஒதுக்கி செலவழிப்பதால், மக்கள் கலைஞனாக நிற்கிறார்கள்.
கலைஞனின் ஆளுமை என்பது சமுதாயத்திலிருந்து பிரிந்து வெறும் கலைப் பெருக்கமாக மட்டுமே நிகழ்ந்து வந்தது. சமூகத்திசையில் ஆற்றுப் படுத்தவேண்டுமென்ற போக்கு இவர்களிடம் கூவிக்கூவிப் பார்த்தும், கேட்டும் வரப் பெறவில்லை. இவ்வாறு வித்தியாசமானவர்களும் இருக்க, சமூகம் பார்த்து, அதன் இயங்கு திசை நோக்கி, தன் கலை ஆளுமையை வளர்த்துக் கொள்கிற சிலரில், ஓவியர் புகழேந்தி முன்வரிசைக்காரராக நிற்கிறார். அவருடைய ஓவியத் திசை வழியின் இன்று வரையான பயணம் அது விடுதலைக்குப் போராடும் மக்களின் திசைவழி என்பதைக் காண்கிறேன்.
புகழேந்தியின் ஓவியங்கள் கோடுகளுக்குள் அடங்காதவை. நாற்புறமும் கோடுகள் போட்டு அதற்குள் அந்தக் கோட்டுச் சட்டகத்துக்குள் அடங்கமறுக்கின்றன. பெரும்பான்மையான ஓவியங்கள், கோடுகள் தாண்டியே சஞ்சரிப்பவை.
கோட்டுக்குள் அடங்காதவைகளை, இரு வகையாகப் பொருள் தேர்ந்து கொள்ளலாம். பழைய மரபுகளிலிருந்து திமிறி, மீறி வெளிவருகிறேன் என்பது ஒன்று; கோட்டுக்கு வெளியே மனிதர் தொட இயலா பெரியவெளி இருக்கிறது. இந்த பிரபஞ்ச வெளியில் சுதந்திரமாக உலாவாருங்கள் எனக் கூறுகிற அழைப்பு மற்றொன்று. கோட்டுக்குள் மறிக்கப்படாத கட்டுப்படுத்தப்படாத இந்த ஓவியங்களை இவ்வாறான அழைப்புக்களாக காண்கிறேன். "உயிர் உறைந்த ஓவியங்கள்" காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்கள் தலைப்பை பொய்யாக்கவில்லை. ஒவ்வொரு சித்தரிப்பிலும் உயிர் உறைந்து நிற்கிறது.
ஓவியங்கள் தமக்குள் இன அழிப்புத் துயரத்தின் தொடர்பில் கை கோர்த்து நீளுகின்றன. ஒன்று மற்றொன்றைக் காட்டி, நான் பேசிவிட்டேன், அடுத்துள்ளது பேசும் என்கிறது. அஞ்சல் தொடரோட்டம் போல (Relay Race) ஒன்டிலிருந்து, மற்றொன்று, அதிலிருந்து அடுத்தது என கொடுக்குப் பிடித்தபடி வருகின்றன.
"இளைஞரின் பிணங்கள்
தூக்கு மேடையில் தொங்கும் தியாகிகள்
ஈயரவை துளைத்த இதயங்கள்
இவர்களெல்லாம்,
குளிர்ந்து உறைந்து அசைவற்று
தோற்றமளிக்கிற இவர்களெல்லாம்
கொல்லப்படாத ஜீவசக்தியோடு
வேறு வேறு இடங்களில் உயிர்த் தெழுகிறார்கள்"
என்று வால்ட்விட்மன் வரிகளில் குறிப்பிடுவது போல் உயிர் உறைந்து போன இந்த ஓவியங்களுக்குள் இருந்து ஈழவிடுதலை வீரர்கள் உயிர்த்தெழுந்து வருகிறார்கள்.
அலுமினியப் பறவைகள் கக்கும் எறிகணைகளிலிருந்து, குழந்தையைக் காக்க மார்புக்குக் கீழே அழுத்தி நிலத்தில் கவிழ்ந்து அண்ணாந்து பார்க்கும் தாய் அவர்களோடு நானும் அழுகிறேன்.
"இந்த யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு லட்சம் தமிழர்கள் சர்வதேச அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் ரத்த சாட்சியாக இருக்கிறார்கள். இந்தக் கணத்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் என்ற மொழிப்பிரதேசத்தில் வாழ்பவன் என்ற முறயில் என்னை ஒரு அகதியாக, நாடற்றவனாக, நிலமற்றவனாக, மிகக் குரூரமாகத் தோற்கடிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நாஜிகளால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் இவ்வாறுதான் உணர்ந்திருக்கக் கூடும். தமிழ் அடையாள உணர்வுக்கு வெளியே அன்னியர்கள் இந்தத் துயரத்தினைப் புரிந்து கொள்வது கடினமானது."
என்ற கவிஞர் மனுஷ்யபுத்திரனினும் அதிகமாக என்னால் அழ இயலாது. இந்த ஓவியங்கள், இவ்வாறுதான் என்னை உனரச் செய்கின்றன.
இலங்கைப் படையினரிடம் அகப்பட்ட இளைஞர்கள், சித்திரவைதக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். என்பதை பதிவு, இணையம் வழியாக காணொளி (வீடியோ) காண முடிந்தது. ஒன்பது இளைஞர்களை ஒவ்வொருவராய் இழுத்து வந்து, ஆடை களைந்து நிர்வாணப்படுத்தி கண்கள், கைகள், கட்டப்பட்ட நிலையில் தரைவெளிக்கு அழைத்து வரப்பட்டு, சிங்களச் சிப்பாய்கள் கேலி செய்து சிரித்து பூட்ஸ் கால்களால் உதைத்து துப்பாக்கியால் சுட்டு மண்டை சிதறி ரத்தம் கொட்டி, கொல்லல்பட்ட காட்சியை கண்டபோது அதுபோன்ற கொல்லப்பட்டதான துடிப்பை நான் உணர்கிறேன். அது போன்றதான காணொளியை இந்த ஓவியங்கள் எனக்குள் உட்செலுத்துவதாக உணர்கிறேன்.
ஒரு கவிதைக்குப் போலவே ஓவியத்துக்கும் பல அறிதல் திசைகள் உண்டு. ஓவியன் உணர்ந்த திசையைவிட, பார்வையாளன் தனக்குள் கிரகித்துச் சென்றடையும் பலதிசைகள் உண்டு. காற்று மரக்கிளைகளினூடாகச் சென்று சிலுப்பவதை ஓவியர்கள் பல வகைகளில், பல வடிவங்களில் வெளிப்படுத்துவார்கள். காற்றசைவின் ஊடாக மரம் சிலும்புவதை பார்வையாளன் உணரக் கூடுமாயின், அந்த வெற்றி பார்வையாளன், கலைஞன் என்ற இருமுனைகளிலும் தங்கியுள்ளது.
பார்வையாளனிடம் பலதிசைச் சிந்தனைகளை நடுகிற ஓவியங்கள் பல.
மரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் வரும் ஈழத் தமிழருக்கு ஒரேயொரு வழியில் வந்தது. வானில் பறக்கும் அலுமினியப் பறவைகள், நிலத்தில் பறக்கிற பல்குழல் எறிகணைப் பீரங்கிகள் சிப்பாயின் கையிலிருந்து வெடிக்கிற துப்பாக்கிகள் என கருமருந்துக் குண்டுகளில் அவர்களுக்கு மரணம் வந்தது.
மார்பளவுக்கு மேலே மல்லாந்து பார்த்த தலை; பக்கத்தில் தனியாய் ஒரு கை; அது அதன் கையல்ல வேறொரு கை. வேறு பக்கமாய் திரும்பிக்கிடக்கும் அந்தக் கை இன்னொரு உடலின் கை எனத் தெரிகிறது. தலைமாட்டில் தனியாய் ஒரு கால். ஒரு தலை, ஒரு கை, ஒருகால் முள்ளிவாய்க்காலில் ஒரேயொரு பொழுதில் விழுந்த 25 ஆயிரம் பிணக் குவியலைக் காட்டிவிடுகிறது. இந்த தலை, கை, ஒரு கால் மட்டுமே ஓவியத்தில் தெரிவது அதற்குப் பின் தெரியாமல் மறைந்துள்ள துயரக் காட்சிகள் பல. அவைகளைத் தொட பெரிய சிந்தனை, தலைநிறைய அறிவு, மலை உயரக் கற்பனை வேண்டியதில்லை. சிறிதாய் ஒரு மனித இதயமும், கொஞ்சமாய் சிந்தனையும் இருந்தால் போதுமானவை.
தொடைகளோடுள்ள இரு கால்கள்; அவைகளுக்கு முன்னால் கதறியழும் விரிந்த இரு கரங்கள். கொத்துக் கொத்தாய் மரித்த உடல்களை, இரண்டு குறியீடுகளால் காட்சிப் படுத்திவிடுகிறார். மறைந்து ஒளிந்துள்ள இந்தக் காட்சிகளக் காண சின்ன இதயமும், கொஞ்சம் சிந்தனையும் போதும்.
அதேபோல் மார்புக்கு மேல் மல்லாந்த பார்வையுடந் ஒரு உடல்; அதன் மல்லாந்த பார்வைக்கு முன் ஒரு கை, பார்வைதொட இயலாத திசையில் தலைமாட்டில் ஒரு கால். இவர்களெல்லாம் வேறு வேறு உடல்கள். ஒன்றாய்ப் பிணமானவர்கள்.
இந்தக் கண்றாவிகளைப் பார்த்து வெம்மை கனலும் மூச்சுடன் அடுத்த சித்தரிப்புக்கு நகர்கிறீர்கள்; அங்கேயும் வரிசையாய் கொல்லப்பட்ட உயிர்கள்.
அங்கொரு போராளி வீழ்ந்து கிடக்க, அவர் தலைக்கருகில் இரு செருப்புகள்; அவர் வீழ்ந்து விட்டாலும் இன்னொரு போராளிக்குள் அந்த வீரம் குடியேறும் என்பதை,
'இன்னொரு போராளியின் காலில் என் செருப்புக்கள்'
என்று ஓவியத்தின் கீழ் எழுதப்பட்ட வாசகம் மெய்ப்பிக்கிறது. இத்தருணத்தில் நாம் போராடவில்லையென்றால் எதிரி துப்பாக்கியால் நம் உயிரைப் பறிப்பான்; நம் சந்ததியினரைப் பழி எடுப்பான். அதன் பின் எலும்பினைக் குத்திக் காட்டி, இந்த எலும்புகள் அடிமையின் எலும்புகள் என்று ஏளனம் செய்வான் என்பதையும் அது நம் மூளையில் ஏற்றுகிறது.
குரோஷியக் கவிஞர் ஜீன் கஸ்ட்டேலன்.
அம்மா என்பது அவர் எழுதிய கவிதை. அம்மா என்றழைத்துப் பேசுகிறது கவிதை.
அம்மா
யுத்தக்களத்திலிருந்து
வாயில்நுரைதள்ள
மூச்சிரைத்து
தனியாகவரும் என் குதிரைக்கு
தண்ணீர் கொடு
அதன் முதுகைத் தடவிக்கொடு.
அது,
இன்னொரு வீரனுக்குப் பயன்படட்டும்.
திரும்பிவந்த குதிரைமேல்
என்னைக் காணாமல்
கண்ணீர் சிந்தி
என் சவக் குழியைத் தேடாதே!
சுதந்திரம் அடைந்த இந்நாடு
உன்மைந்தனின்
இன்னொரு வடிவமன்றோ!
எங்கோ யுத்தகளத்திலிருந்து வீரச் சாவுக்கு முந்திய குரலாக இது ஒலிக்கிறது. அந்த மாவீரனின் அன்னை மட்டுமே அறியும் உள்குரல் அல்ல. அன்னை வழியாக அக்குரல் எல்லோருக்கும் புரட்சிகர உணர்வை கடத்திப் போகிறது.
கள முனையில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உடலை சிங்களச் சிப்பாய்கள் பாலியல் வன்முறை செய்த புகைப்படங்கள் வந்தன. செய்திகளும் காணொளிக் காட்சிகளும் வந்தன. சிங்கச் சிப்பாய்களே அதைப் படமெடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். ஓவியம் அதைப் பதிவு செய்கிறது. உயிரற்ற உடலை, செத்த பிணத்தை காமவெறிகொண்டு நோக்கிய செயல்களை பெண்ணுடல் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் மீறல் என்பதாக கொள்வதா? விடுதலைப் புலிகள் என்பதால் வெறி கொண்டனர் என்பதா? அவர்கள் தமிழ்ப் பெண்கள் என்பதால் காமவெறியோடு பிணத்தை புணர்ந்தார்கள் என்பதா? என்ற கேள்விகளை ஓவியம் முன்வைக்கிறது.
அவலங்களை மட்டுமே பதிவு செய்வதாக இல்லை காட்சி. அங்கங்கே எதிர்ப்புக் குரலை பதிவு செய்த ஓவியங்கள் கடைசியில் மொத்தமாய் குரல் உயர்த்திய முடிவுகளும் அணிவகுப்புமாய் முடிகிறது.
"
காயம் சுமக்குமோ
இனிவரும் காலம்."
என்று நம்பிக்கை துளிர்க்கச் செய்யும் ஓவியங்களாய் நிறைவு பெறுகிறது.
ஓவியங்கள் சொல்வது ஓராயிரம் என்றால், ஓவியங்களுக்காக வடிக்கப்பட்ட வாசகங்கள் பேசுவதோ பல ஆயிரம்! ஓவியம் எழுப்பும் அர்த்தங்களுக்குச் சமமாய் சிலபொழுதுகளில் அதையும் தாண்டி அவை பேசுகின்றன. ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெறமுடிகிறது என்பதை வெளிப்படுத்தும்
"இழப்பதற்கு முடிவெடுத்தோம்
பெறுவதற்காக"
என்ற வாசகத்தின் சமத்காரம் பெரிது.
ஓவியங்களுக்குப் பொருத்தமான வாசகங்களை கவிஞர் காசி ஆனந்தன், இன்குலாப் ஆகியோர் அறிவுக் கொடையாக அளித்திருக்கிறார்கள். ஓவியத்திற்கு அளிக்கும் பாராட்டுக்கள் இவர்களுக்கும் உவியவை.
ஒவ்வொரு கலைஞனும் தன் சிறுவயதில் தனக்குள்ளிருக்கும் ஏதோ ஒரு ஆற்றலை வெளிப்படுத்துகிறான். தன்னை அடையாளம் கண்டுகொள்கிறான். நேரம், உழைப்பு, சிந்தனை, எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தி, திறனை திமிறி எழச் செய்கிறான். ஒரு கலைஞனின் பால்யமும், இளம் பருவமும் இந்த முயற்சியில் புதைக்கப்படுகிறது. புதைக்கப்பட்ட விதை வேரும் தூருமாய், கொப்பும் கிளையுமாய், பூவும் கனியுமாய் பெருமரமாய் வெளிப்படுகிறது. பெருவிருட்சமாய் ஆற்றல் மாறிய கணத்தில் விலை பேசுகிறவர்கள் வருகிறார்கள். பணம், பதவி, பட்டம், புகழ், பாராட்டு என பல விலைகள்! நவீன காலத்தில் நூதனமான புதிய விலைகள் களத்துக்கு வந்துள்ளன. இவைகளில் ஏதாவது ஒன்றில் அல்லது சிலவற்றில் மடங்கி, பின்னர் அதுவே தொடர்கையில், கலைஞனின் வீழ்ச்சி தொடங்குகிறது. கலைமட்டுமே சுவாசிப்பு என்றிருந்த முன் காலம் மறைந்து, அங்கீகாரம் மட்டுமே சுவாசிப்பு என்று ஆகிவிடுகையில், கலையில் புதிய தேடல்கள் அற்றுப்போகிறது.
அங்கீகாரம் இல்லாமல் ஒரு கலைஞன் மேலெழுந்து வரஇயலாது. உரிய காலத்தில் கிடைக்கப் பெறுகிற அங்கீகாரம், யானை பலம்! அங்கீகாரத்தை தேடிப் போகக்கூடாது. தானே வருவதே சிறப்பு என்று பேசும் காலம் மலையேறிவிட்டது. தன்கையைத் தானே ஊன்றி கரணமடித்து வித்தையை முழுமையாக்கி மேலெழுந்த போது, அங்கீகாரம் விழையும் தாபம் விழிகளில் நிறையும்.
அங்கீகாரம் என்பது, எங்கிருந்து வருகிறது. எதனால் என்பவை அடிப்படையானவை. அதிகார பீடத்திலிருந்து, அல்லது அதுபோன்ற தோரணைகளிலிருந்து வருமாயின் அதன் நோக்கமும் வேறானதாகவே இருக்கிறது. ஓவியர் புகழுக்கு அங்கீகாரம் மக்களிடமிருந்து வருகிறது. மக்களை தேடிப்போய் விதைக்கிறார்.
தன் காலத்தில் மேல்நோக்கிப் பீறிடும் பிரச்னையை முன்னிறுத்தி, அதனோடு இணைந்து, கலவையாகி, கரைந்து விடுகிற குணம் தான் இந்த ஓவியக் காட்சியின் வெளிப்பாடு.
கடந்த காலத்தின் அவருடைய ஒவவொரு வெளிப்பாடும் காலத்தின், மக்களின் அடையாளங் களாகவே விளங்கின. உறங்கா நிறுவனங்களில் தொடங்கி, அதிரும் கோடுகள், சிதைந்த கூடு வழியாக உயிர் உறைந்த நிறங்கள் வரை தொடர்கிறது. குறிப்பிட்ட காலத்தின் வாழ்வுச்சிதைவை, போர்க்குணத்தை சரியாகக் கையகப்படுத்திய இந்த ஓவியங்கள் காலத்தை சரியாகக் கைப்படுத்திய எந்த ஓவியமும் போல். நூற்றாண்டுகளின் ஊடாக நடந்து போகின்றன.
|