தூரிகையா? பேரிகையா?
                           -த.ஸ்டாலின் குணசேகரன்.
                           ஜனசக்தி
மே.15.2010

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து தரையிலோ, சுவரிலோ, சாலையிலோ விளக்குக் கம்பங்களிலோ, கரித்துண்டுகளாலோ, பச்சை இலைகளாலோ என்மனதில் தோன்றியவைகளை நான் கிறுக்கி வந்திருக்கிறேன். என் நினைவு சரியாக இருக்குமானால் நான் மூன்றாவது படிக்கும்போது வரலாற்று நூல்களில் உள்ள, குறிப்பாக, ஆங்கில பிரபுக்களின் முகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றை ஆர்வத்துடன் பார்த்து வரையத் தொடங்கினேன்’’ என்று தனது தொடக்க காலத்தை நினைவு கூருகின்றார் ஓவியர் புகழேந்தி.

ஓவியர் புகழேந்தி தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு பகுதியிலுள்ள தும்பத்திக்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஓவியத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்தவர். 1987ஆம் ஆண்டு கல்கத்தா நகரில் இந்திய நாடு முழுமையிலுமுள்ள சுமார் நான்காயிரம் ஓவியர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டியில் தனது 21 ஆவது வயதிலேயே பங்கேற்று உலகப் புகழ் பெற்ற ஓவியர் எம்.எவ்.உசேனால் தேசிய விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டவர் ஓவியர் புகழேந்தி.

11.07.1987 ஆம் தேதி ‘ஜனசக்தி’ இதழுக்கு அளித்த பேட்டியின்போதே “என்னுடைய எதிர்காலத்திட்டம் சமூகத்தைப் பாதிக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் ஓவியமாகத் தீட்டி மக்களுக்கு உணர்த்துவது. சிலர் தற்பொழுது மார்டன் ஆர்ட் என்றால் மக்களுக்குப் புரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாடர்ன் ஆர்ட் என்றால் பெரிய நிகழ்ச்சியை எளிமைப்படுத்திக் காட்டுவதுதான். அதை முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்” என்று ஓவியக் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே தெள்ளத் தெளிவாகத் தன்னுடைய லட்சியத்தைப் பிரகடனப் படுத்தியவர் புகழேந்தி.

கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தனது ஓவியப் பாதையில் இமைப்பொழுதும் சோராமல் வெற்றி நடைபோட்டு வரும் ஓவியர் புகழேந்தியின் சமீபத்திய சாதனை மைல்கல்தான், ‘போர் முகங்கள்’ என்ற ஓவியக் காட்சி. சென்னை, தியாகராயநகர், வெங்கட் நாரயணா சாலையிலுள்ள செ.தெ.நாயகம் மேல்நிலைப் பள்ளியில் ‘போர்முகங்கள்’ என்ற ஓவியக் காட்சி 11.05.2010 முதல் 16.05.2010 வரை ஐந்து நாட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் தாங்கொணாத் துன்ப துயரங்களையும் துல்லியமாகத் தோலுரித்துக் காட்டும் உயிர்த்துடிப்பு மிக்க ஓவியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. உச்சக் கட்ட ஓவியத் திறமையும் ஓவியர்தம் உள்ளக் குமுறலும் இரண்டறக் கலந்து தூரிகை மூலம் வெளிப்பட்டிருப்பதை ஈரமுள்ள இதயங்களைக் கொண்ட எவராலும் எளிதாக உணர முடியும்.

ஆம்… ஒரு வரலாற்றுப் பெரு நிகழ்வு குறித்து ஒரே ஓவியர், எண்பதிற்கும் மேற்பட்ட  விதமான ஓவியங்களை வரைந்திருப்பதே ஒரு வரலாறாகும். ஒவ்வொரு ஓவியத்திற்குக் கீழும் இரண்டிரண்டு வரிகள் நறுக்குத் தெறித்தாற்போல… காத்திருப்பு – இழப்பதற்கு முடிவெடுத்தோம் பெறுவதற்காக, மரண வேதனை – இப்பொழுதேனும் பாடு உயிர்ப்பின் பாடலை, வெறி –தகர்க்கப் பட்டது எங்கள் வீடு அல்ல நாடு, சித்திரவதை – திசைகளைக் கேட்டேன் தேம்புகின்றன, பாய்ச்சல் – ஒரே நேரத்தில் மண்விடுதலையும் பெண்விடுதலையும், களம் – பதுங்கி இருப்போமே தவிர ஒதுங்கி இருக்கமாட்டோம்’ என்று காவியத்தையே ஒரு ஓவியத்தில் அடக்கி அதற்குத் திலகமிட்டாற் போன்று இந்த அடிக் குறிப்புகள் அமைந்திருக்கின்றன.

“ஓவியர் புகழேந்தி போராட்டம் பற்றிய ஓவியங்களை வரையவில்லை. இவரது ஓவியங்களே போராடுகின்றன” என்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். ஈழத்தமிழர்களுக்காக மட்டும் இவரது இதயம் துடிக்கவில்லை. உலகில் எங்கெல்லாம் மானுடம் காயப்படுகின்றதோ அங்கெல்லாம் பாதிக்கப் பட்டவர்களுக்காக இவர் தூரிகைத் துப்பாக்கியைத் தூக்குகிறார்.

குஜராத் பூகம்பத்தால் மனிதர்கள் புதையுண்டு கிடந்தபோது அந்தப் பேரழிவை எண்ணி எண்ணி மனம் வெதும்பிய ஓவியர்,150 அடி நீளத்திற்கு அதுகுறித்து ஒரு வரலாறுகாணாத ஓவியத்தை வரைந்து அதனைக் காட்சிக்கு வைத்து கண்ணீர் விட்ட மனிதநேயர். அதேபோன்று குஜராத்தில் நடந்த மதக்கலவரக் கொடுமைகளையும் இவரது தூரிகை விட்டுவைக்கவில்லை .

               ஆர்மீனியாவில் பூகம்பம் வெடித்தபோது துடித்தெழுந்து ஓவியம் தீட்டி ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தமிழர்தம் கோட்பாட்டை நிலைநிறுத்தியவர். வெறும் புலம்பலுக்காக அல்ல… இவரது இத்தகு கலைத்திறனால் கிடைத்த காசுகள் அனைத்தயும் ஒன்றாய்ச் சேர்த்து கண்ணீருடன் நிற்கதியாய் நின்றவர்களுக்கு அனுப்பி வைத்து தனது தனது கடமையை நெஞ்சாற நிறைவேற்றிய தமிழ்க்குடிமகன்.

ஐதராபாத்தில் மதக்கலவரம் நடந்தபோது அங்குசென்று உள்ளூர் ஓவியர்களுடன் கைகோர்த்து தனது மத நல்லிணக்க கருத்தை ஓவியங்களாய் வரைந்தார். பொதுவான மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து ஓவியக் கல்லூரிமாணவர்கள் சிலரை ஒன்றுதிரட்டி ஓவியர் புகழேந்தி தஞ்சை பெரியகோவில் அருகிலுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு முன்னால் இருபத்திமூன்று வயது இழைஞனாக இருந்தபோதே பிரமாண்டமான கூட்டு ஓவியத்தை மக்களுக்கு எழிச்சியூட்டும் முறையில் வரைந்தார்.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சாதி வன்முறைக்கு எதிராக ஓவியங்கள் தீட்டினார் புகழேந்தி. காவிரி நதிநீர்ப் பிரச்சனையால் கர்நாடக மானிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழர்களின் துயரங்களை தனது தூரிகையால் ஓவியங்களாக வரைந்தார்.

பாபர் மசூதி இடிப்பில் கலங்கிப்போன புகழேந்தி, நடைபெற்ற அநியாயத்தை தனது உயிரோட்டமிக்க ஓவியங்கள் மூலம் நியாயம் கேட்டார்.

வெண்மணித் தீயில் வெந்து மடிந்த அப்பாவி மக்களின் அலரலைத் தனது ஓவியத் திறத்தால் நமது நெஞ்சில் நெருப்பாய்க் கொட்டியவர்.

உலகின் முக்கிய நிகழ்வுகள் எதையுமே ஓவியமாகத் தீட்டாமல் ஒதுங்கி நின்றவரல்ல புகழேந்தி. சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, உலகப் போர்கள், ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்பு, சோமாலியா பஞ்சம், ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தல், நெல்சன் மண்டேலா, கொம்பியூட்டர், வியட்நாமில் அமெரிக்கா வீசிய நேபாம் குண்டு, ஹிரோசிமா நகரின் மீது அணுகுண்டு, கியூபப் புரட்சி, பிடல்கஸ்ட்ரோ என்று உலகளாவிய பிரச்சனைகளையும் உலகப் புகழ் மனிதர்களையும் தனது ஓவியங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சென்று விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் இடைவிடாமல் ஈடுபட்டு டிருக்கிறார்.

ஜாலியன்வாலாபாக், உப்பு சத்தியாக்கிரகம், காந்தியடிகள், சுபாஸ்சந்திரபோஸ், பகத்சிங், அம்பேத்கர்,  தாகூர், அன்னை தெரேசா போன்ற தலைவர்களையும், ஒரிசாப் புயல் போன்ற நிகழ்வுகளையும் படங்களாகப் பதிவு செய்துள்ளார் புகழேந்தி.

                  பாரதி, தந்தை பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் போன்ற தமிழகத்தின் முக்கிய தலைவர்களை ஓவியமாக்குவது இவருக்கு தண்ணீர்பட்டபாடு. உலகெங்கும் தனது ஓவியக்கண்காட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தி மக்களுக்கு  எழுச்சியையும் விழிப்புணர்வையும், விடுதலை வேட்கையையும், மனித உரிமைச் சிந்தனையையும், மனித நேயத்தையும், மதனல்லிணக்க உணர்வையும் மங்காமல் சலிக்காமல் உணர்வுபூர்வமாக ஏற்படுத்தி வருகின்றார் ஓவியர் புகழேந்தி.

மக்கள் பிரச்சனைகள் சார்ந்த ஓவியங்கள் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவைகளைத் தீட்டியிருக்கும் ஓவியர் புகழேந்தி, தற்போது சென்னை ஓவியக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

கலை என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக, சமூக அவலங்களை வெளிப்படுத்துவதன் மூலம் – மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்டமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ‘கலை கலைக்காக’ என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. கலை சமூகத்திற்காகத்தான்” என்ற தெளிவான பிரகடனத்தோடு பயணிக்கும் ஓவியர் புகழேந்தியின் நோக்கம் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் முற்போக்காளர்கள் விருப்பம்.