ஐயாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்திய ஓவிய மரபு குகையிலிருந்து துவங்கி, குளிர்பதனக் கண்காட்சி அரங்குகள் வரை பரிணாமமடைந்து வளர்ந்து நிற்கிறது.
பரந்த நிலக்காட்சிகளையும் (Landscapes) தெய்வ உருவங்களையும் வரையப் பயன்பட்டு வந்த ஓவியக்கலை, நிழற்படக் கலையின் வருகையின் பின்பு... பிரெதியெடுக்கிற தன்நிலையிலிருந்து மேம்பட்டு உணர்வுகளை வரைய முனைகிற நவீன ஓவியமாக மாறியது.
ஓர் ஓவியன் தன் ஆளுமைக்கேற்ப இக்கலையை தன் உணர்வு சார்ந்த வெளிப்பாடாக மாற்றினான். இம்ப்ரசனிசம், ப்யூச்சரிசம் என்று இசங்களின் கீழ் ஒருவகையினர் கலையினை மேல்தட்டு மக்களுக்கான நுகர்பொருளாக மாற்றியபோது, வெகு சில கலைஞர்களே அதைத் தன் மண்ணுக்கானதாக, மக்களுக்கானதாக முன்னெடுத்துச் சென்றனர். தமிழில் அத்தகைய உணர்வு சார்ந்த ஓவியர்களில் மிக முக்கியமானவர் நம் புகழேந்தி.
உருவப்படங்களை வரைந்தாலும், உலகத் தமிழனின் உள்ளார்ந்தே சோகத்தை வரைந்தாலும், அதில் தனக்கென ஒரு பாணியையும் அழகியலையும் ஒருசேர அமையக் கொண்டவர் புகழேந்தி. ஒரு போராளி தன் கையில் ஏந்திய ஆயுதம்போல தூரிகையை தனது ஓவியக்கலையின் வழியே ஆயுதமாக ஏந்தியவர் எங்கள் புகழேந்தி.
கறுப்பு வெள்ளைக் கோடுகளால் இவர் நம்மனதில் தீட்டுகிற வண்ணங்கள் ஆயிரம். ஐயாவின் பல்விதமான ஆளுமைகளை தனது எளிய கோடுகளால் எழுதிப்பார்த்தவர் இவர்.
பாரதிதாசன் தனது கவிதை மொழியின் மூலம் ஏற்படுத்திய தமிழுணர்வை, காட்சி சார்ந்த தனது ஓவியங்களின் மூலம் ஏற்படுத்தியவர் இவர். கலை கலைக்காக என்றும் கலை மக்களுக்காக என்றும், இருவேறாக நிலவி வரும் கருத்துச்சூழலில் கலையைக் கலையாகவும் அதேநிலையில் மக்களுக்கானதாகவும் கையாள்வதில் புகழேந்தி முக்கியமானவர்.
உணர்வு சார்ந்த இவரது கலை மேலும் வளர வாழ்த்துகள்.
|