ஓவியர் புகழேந்தி ஏனைய ஓவியர்களைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு கலைஞர். இதை அவரது ஓவியங்கள் புலப்படுத்துகின்றன.
பொதுவாக ஓவியங்கள் இனிய இயற்கைக் காட்சிகள் செடிகள் கொடிகள், அழகிய பெண்கள் முதலியவற்றையே சித்திரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. காலப்போக்கில் ஓவியக் கலைஞர்கள் இந்த எண்ணத்தைத் தகர்த்து புதுவிதமான ஓவியங்களை படைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். எனினும் மக்களின் பொதுவான ரசனை அதிகம் மாறிவிடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்நிலையில் புகழேந்தி அழுத்தமாகச் சொல்கிறார். இந்த சமூகத்தில் அழகியலை விட அவலங்களே மோலங்கி நிற்கின்றன. மனித சமூகத்திற்கு எதிரான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனது ஓவியங்களில் அவற்றை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களது சிந்தனையைத் தூண்ட விரும்புகிறேன் என்று.
ஆரம்ப காலத்தில் புகழேந்தியும் இயற்கையின் இனிய காட்சிகளையும் பலவிதமான அழகுகளையும் ஓவியங்களாகத் தீட்டுவதில் தான் நாட்டம் கொண்டிருந்தார். காலமும் அனுபவமும் அவர் நோக்கிலும் ஓவியப் போக்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. இயற்கையின் வசீகர வனப்புகளை ஓவியங்களாக்குவதை விட, மனிதனை அவனது பிரச்சினைகளை -அவலங்களை, போராட்டங்களை -அவனது வெற்றிகளை ஓவியங்களில் பதிவு செய்வதே முக்கியமாகும் என்று அவர் கருதலானார். அதன் பிறகு, சமூக நோக்கில் மானுடச் சிக்கல்களை ஓவியங்களில் தீட்டுவதே அவருக்குப் பிடித்தமான செயல் ஆயிற்று.
நெருடலில் இருக்கின்ற மனிதன் பக்கத்தில் நின்று அவனது நெருக்கடியைப் புரிந்துகொண்டு, அதனை ஓவியமாக ஆக்கம் செய்வதில் தான் எனது ஈடுபாடு ஒளிந்து கொண்டிருக்கிறது. இதுதான் என் கலைக்கோட்பாடு எனத் தேர்ந்து கொண்டார் ஓவியர் புகழேந்தி.
எனவே, உலகில் பாதிப்புகள் ஏற்படுத்திய நிகழ்வுகளை சமூகத்தை தாக்கிய கொடுமைகளை, மனிதரின் சோக அனுபவங்களையும் துயரங்களையும், தனது பாணியில் ஓவியங்களில் பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டார் அவர். அவை எரியும் வண்ணங்கள் எனும் தொகுப்பாக வெளியாயின.
எரியும் வண்ணங்கள் மூலம் மக்களின் கவனிப்பையும் பாராட்டுதலையும் வெகுவாகப் பெற்ற ஓவியர், பின்னர், இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளையும், வரலாறு படைத்த நாயகர்களாக விளங்கியவர்களையும் ஓவியப் படைப்புகளாக்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டு ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள் எனும் தொகுப்பில் அவை பதிவாகியிருக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டில் வன்முறைச் செயல்களும், ஒடுக்குமுறைகளும், அவற்றின் விளைவாகப் பரவிய வறுமை, பஞ்சம், பட்னிச் சாவுகளும் மேலோங்கிக் காணப்பட்டன. அமெரிக்காவின் அரக்கத்தனமான ஹிரோசிமா அணுகுண்டு வெடிப்பு, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வெறிச் செயலான ஜாலியன் வாலாபாக் படுகொலை, தமிழகத்தில் முதலாளித்துவ ஆட்சியின் வெறியின் அக்கிரமச் செயலான வெண்மணியில் உழைக்கும் மக்களை உயிரோடு தீயிட்டு எரித்தது, ஜெர்மனியில் நாஜிகளின் கொடூரங்கள், இலங்கையில் இனவெறிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் இந்த விதமான பலப்பல ஒடுக்குமுறைகளும் 'உறங்கா நிறங்கள்' ஆகப் பதிவாகியுள்ளன புகழேந்தியின் தூரிகை மூலம் உள்ளத்தில் உணர்வோடும் ஓவியங்களாக உருவாகியுள்ளன அவை.
இத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து, மக்களுக்கு உணர்வூட்டிப் போராட்டத்தில் ஈடுபடச் செய்து, உலக வரலாற்றில் வீரநாயகர்களாக இடம்பெற்றுள்ள லெனின், காந்தி, நேதாஜி, மாஓ, காஸ்ட்ரோ, சேகுவேரா, மண்டேலா, பெரியார், அம்பேத்கர், திலீபன், பிரபாகரன் முதலிய பலரையும் புகழேந்தி உயிர்த்துடிப்புள்ள ஓவியங்களாகப் படைத்திருக்கிறார்.
அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் தன்மையில் சாகா இலக்கியங்கள் படைத்து உலக மக்களுக்கு விழிப்பும் உரிமை உணர்வும் போராட்ட எழுச்சியும் ஊட்டுவதில் அக்கறை கொண்டிருந்த படைப்பாளிகளான கார்க்கி, தாகூர், பாரதி, பாரதிதாசன் முதலியோரையும் புகழேந்தி அழியா ஓவியங்களாக அணி செய்திருக்கிறார். அறிவியல் புரட்சி செய்த அய்ன்ஸ்டின், ஓவியப் புரட்சியாளர் பிக்காசோ, நிலாவில் காலடி பதித்த ஆர்ம்ஸ்ட்ராங் போன்ற இருபதாம் நூற்றாண்டுச் சாதனையாளர்¢களையும் ஓவியரின் தூரிகை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
உலகத்தின் உள்ளதைத் தொட்டு உலுக்கிய மைலாய் கோரமும், சோமாலியாவின் பஞ்சமும் வறுமைக் கொடுமையும், யாழ் நூலக எரிப்பும், குட்டி மணியின் கண்கள் பறிக்கப்பட்ட விதமும், ஒரிசா புயலின் நாசச் செயலும் காண்போர் மனசைப் பிசைகிற தன்மையில் ஓவியங்களாக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து விடுதலைக்காகப் போராட முற்பட்டிருக்கும் எழுச்சியுற்ற பெண், தாய்மையின் அளவிலாக் கருணையையும் பரிவையும் புலப்படுத்தும் அன்னை தெரசா ஆகிய ஓவியங்கள் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கவை.
'முளைக்க ஒரு பிடி மண்தேடி, அலையும் விதையென'த் திரிகிற 'யாழ் வெளியேற்றம்' தனித்தன்மை உடைய ஓவியமாகப் பளிச்சிடுகிறது. இருபதாம் நூற்றாண்டின் அறிவுப் பாய்ச்சலின் அடையாளமாய் விளங்கும் 'கணினி' முக்கியமான பதிவு ஆகும்.
மரபின் சாயலும் நவீன பாணியின் தாக்கமும் கொண்டவனாக அமைந்துள்ளன. புகழேந்தியின் புதுமை ஓவியங்களான உறங்கா நிறங்கள், ஒவ்வொரு ஓவியத்துக்கும் விளக்கமாக இணைக்கப்பட்டிருக்கிற கவிதைகள் சிறப்பானவை. வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவை.
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டுக் கிடந்த மக்களை விழிக்கச் செய்து உணர்வூட்டி, உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து முன்னேறும்படி வழிகாட்டிய புரட்சிப் புயல் பெரியார் ஆவார். புரட்சி உள்ளம் பெற்ற ஓவியர் புகழேந்தி பெரியாரால் ஈர்க்கப்பட்டது இயல்பேயாகும்.
'பெரியார் ஓர் இனத்தின் வரலாறு. நமக்குத் திசையைக் காட்டியவராக இன்னும் செல்ல வேண்டிய திசையைக் காட்டிக் கொண்டிருப்பவராக தந்தை பெரியார் இருக்கிறார்' என்று கூறும் புகழேந்தி பெரியாரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தோற்றத்தை விதம் விதமாக ஓவியமாக்கியிருக்கிறார். 'திசைமுகம்' எனும் தொகுப்பாக அவை பிரசுரம் பெற்றுள்ளன.
பெரியாரின் முகம் அற்புதமானது. தனி அழகு கொண்டது. பெரியார் பற்றி எதுவும் அறிந்திராதவர்கள் கூட, பெரியாரின் முகத்தைப் போட்டோவில் பார்த்தாலே இவர் அறிஞர் சிந்தனையாளர், பெரிய மனிதர் என்று எண்ணவைக்கும் தோற்றப் பொலிவு கொண்ட முகம் அது.
அந்த முகத்தின் கம்பீரத்தை, முகத்தின் சுருக்கங்களை, ஒளிமிகுந்த விழிகளை, விழிகளுக்கு அணியாக விளங்கும் புருவங்களை, பறக்கும் தலைமுடியை, அடர்ந்த தாடியை, சிந்திக்கும் பாவனையை, சிரிக்கும் அழகை, மற்றும் பல்வேறு உணர்வுகள் ததும்பும் முகத்தின் தோற்றங்களை, வெவ்வேறு கோணங்களில் அமைந்த எழில் நிறைந்த கறுப்பு வெள்ளை ஓவியங்களாகப் படைத்திருக்கிறார் புகழேந்தி. புகழேந்தியின் ஓவியத் திறமைக்கும் கற்பனை வீச்சுக்கும் சான்றுகளாகத் திகழும் திசைமுகம் பார்த்துப் பார்த்து வியந்து ரசித்து மகிழத் தூண்டும் கலைப் பொக்கிஷம் ஆகும்.
ஓவியர் புகழேந்தியின் 'முகவரிகள்' என்ற தொகுப்பும் முக்கியமானது. சாதனைகள் புரிந்து பெயர் பெற்றுள்ள தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள் பலரது கோட்டோவியங்கள் கொண்டது. உயிர்ப்புடன் விளங்கும் இனிய சித்திரங்கள். பாராட்டப்பட வேண்டிய ஆவணத் தொகுப்பாக இது அமைந்துள்ளது.
பார்ப்பவரைப் பல கோணங்களில் யோசிக்க வைப்பதே ஓவியங்களின் வேலை. 'எப்படி ஒரு நல்ல கவிதை, படிப்பவர்களை யோசிக்க வைக்கிற புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறதோ அதே வேலையை எனது ஓவியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்று புகழேந்தி தன் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள் (மற்றும் எரியும் வண்ணங்கள்) ஆகிய ஓவியத் தொகுப்புகள் ஓவியக் கலைஞரின் ஆசையை நிறைவேற்றும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தூரிகை என்பது எனக்கு ஓர் ஆயுதம். அது, நெருடலில் இருக்கின்ற மனிதன் பக்கத்தில் நின்று, அவனது நெருக்கடியைப் புரிந்து கொண்டு, அதனை ஓவியமாகக் கலையாக்கம் செய்வதற்குத் துணைபுரிகிறது. தூரிகை தீட்டிய ஓவியங்களை மக்களிடம் கொண்டு சென்று அவர்களிடையே சிந்தனைக் கிளர்ச்சிக்கு வழிகோலுவதாக, தூண்டுவதாக, இருக்க வேண்டும் என்பது நோக்கு என்றும் புகழேந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது இந்த உயர் நோக்கம் வெற்றிகரமாகச் செயல்படக் காலம் துணைபுரிய வேண்டும்.
|