விரிவானத்தில் சுதந்திரப் பறவையாக

மூத்த பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி


சிறப்புமலர்- 2004


ஓவியம் ஓர் உன்னதக் கலை. நமது தமிழகத்து கிராமப்புறங்களில் சாதனை படைத்தவர்களை வயிற்றெரிச்சலும் பொறாமையும் ததும்ப மட்டம் தட்டிப் பேசுகிற கடுகுள்ளம் கொண்டவர்கள் இகழ்ச்சி ததும்ப உயோகிக்கும் வார்த்தை 'பெரிய ஓவியம் படைத்து விட்டானோ?' என்பதாகும். சாதனையாளர்களை இகழும்போது கூட அவர்கள் ஓவியத்தின் பெருமை பேரால்தான் பிடிக்காதவர்களை சிறுமைப்படுத்துகிறார்கள். அந்த அளவுக்கு ஓவியம் வரைவது ஒரு பெரும் சாதனை; செய்ய முடியாத காரியம் ஓவியம் வரைவதுதான் என்ற எண்ணம் அந்தக் காலத்தில் மேலோங்கியிருந்தது.

ஓவியங்கள் கோவில்களையும் மதத்தையும், புராணங்களையும் சார்ந்ததாக ஆனபோது ஓவியர்கள் தங்களது கற்பனைக்கேற்ப வரைந்த வினாயகர், சிவன், விஷ்ணு, முருகன், லட்சுமி சரஸ்வதி ஆகியோரின் உருவ ஓவியங்கள் கும்பிடத்தக்க நிலையை எட்டின.

பத்திரிகைகளின் யுகம் மலர்ந்தபோது கவிதைகள், சிறுகதைகள் தொடர்கதைகள் துணுக்குகள் எல்லாம் ஓவியர்களின் கைவண்ண உதவியல்லாமல் வாசகர்களின் உள்ளங்களைக் கவரமுடியாது என்கிற அளவுக்கு ஓவியத்தின் சக்தி இன்னும் உயர்ந்தது.

கேலிச்சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) பிரபலமானபோது டேவிட்லோ, ஆர்.கே. லட்சுமணன், மதன், ராகி, கேஷல், உதயன், மதி என்று பலர் ஓவியக் கலையின் இன்னொரு முகத்தை தங்களது திறமையினால் வெகுஜன அபிப்பிராயங்களின் பிரதிபலிப்புகளாக்கிக் காட்டினார்கள்.

கலைக்கூடங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஓவியங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் கல்விக் கூடங்களிலும் நுழைந்து கல்வி கற்போர் அனைவரும் ஓவியம் வரைவது எப்படி என்று பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாடம் போதிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஓவிய ஆசிரியர்களில் ஒருவர்தான் புகழேந்தி! குடந்தைக் கலைக் கல்லூரியில் ஓவியங் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிகிறார். எனினும் நாடு முழுவதிலுமுள்ள கல்விக் கூடங்களில் ஓவியக் கலை கற்பிக்கும் ஓவிய ஆசிரியர்களுக்கும் புகழேந்திக்குமிடையில் ஈடு இணை சுட்டிக்காட்ட முடியாத ஒரு வித்தியாசம் உண்டு. அது என்ன?

ஓவிய ஆசிரியர்கள் அவரவர் ஓவியம் கற்பிக்கும் ஊருக்கு மட்டுமே தெரிந்தவர்களாகியிருப்பார்கள். பண்டைக் காலம் தொட்டு தொடர்ந்து வரும் மான், மயில், நிலா, மழை அன்னத்தை தூதுவிடும் ஆயிழை காளையின் திமிலைப் பிடித்து அதன் திமிரை அடக்கும் கட்டழகுமிக்க வீரன் இப்படிப்பட்டவைகள் பற்றியே வரைவார்கள்; கற்பிப்பார்கல். சுருக்கமாகச் சொல்வதனால் பாடத்திட்டம் என்னும் வரம்பைத் தாண்டாது ஒவ்வொரு ஆண்டும் அதே சித்திரங்களை மறுபடியும் மறுபடியும் வரைந்து பணியிலமர்ந்து ஓய்வும் பெற்று விடுவார்கள்.

புகழேந்தி அப்படிப்பட்டவரல்ல, அவர் கற்பிக்கும் வகுப்பறையின் எல்லைகளைத் தாண்டி உலகில் நடைபெறும் எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கிறார்; உள் வாங்கிக் கொள்கிறார்.

திருவிழாக் கூட்டங்கள், பரத நாட்டியங்கள், பால்ரூம் டான்சுகள் ஆகியவை அவரது கண்களில் படுகின்றனவே தவிர, நெஞ்சத்தில் பதியவில்லை. புரட்சியில் பூத்தவர்கள். ஒடுக்குமுறைகள் அடக்கு முறைகள் எதிர்த்துத் தங்களது இன்னுயிரையே ஈர்த்தவர்கள். கவிதைகளையும் ஏழை எளியவர்களின் கண்ணீரைத்துடைக்கும் கைக்குட்டைகளாகவே படைத்தவர்கள். ஆணாதிக்கத் தளைகளை அறுத்து புதிய உலகம் படைக்க வீறு கொண்டு எழும் புதுமைப் பெண்கள் போன்றோரின் புகழுருக்களே அவரது உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன.

ஏனைய ஓவிய ஆசிரியர்களைப்போல கல்லூரிப் பணி என்பதை தங்களது வாழ்வுக்கான தங்கக் கூடண்டாக மாற்றிக்கொண்டு சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல வரைந்த ஓவியங்களையே திரும்பத் திரும்ப வரைந்து காட்டும் நிலைக்குத்தன்னை ஆட்படுத்திக் கொள்ளவில்லை அவர். தங்கக் கூண்டின் கதவைத் திறந்து கொண்டு விரும்பிய போதெல்லாம் வெளியே வந்து விரிவானத்தில் சுதந்திரப் பறவையாகப் பறந்து திரிந்து ஓவியத்திற்கான உணர்வுகளை அனுபவங்களை சேகரிப்பதிலும் தீவிரம் காட்டினார்.

விளைவு? வியட்நாமிலிருந்து வெண்மணி வரை அவரது தூரிகை முனையில் உயிரோவிமாய் முகிழ்த்து காண்போர் உள்ளங்களைக் கலங்கடித்தன. நெஞ்சங்களை நெகிழ்ந்தன. சிந்தனையை ஒடுக்கப்பட்டோர் அடக்கப்பட்டோர் இருந்த வதைபட்ட திசை நோக்கித் திருப்பின.

ஒரு பரிபூரணத்துவம் பெற்ற எல்லா ஓவிய மேதைகளாலும் பாராட்டப்படக் கூடியவராக அவரை உருவாக்கிட ஒவ்வொரு கால கட்டத்திலும் அவருக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் கிடைத்த பரிசுகளும் பாராட்டுகளும் உதவின.

ஊர்தோறும் ஓவியக் கண்காட்சி என்கிற அளவுக்கு அவரது கனவுகள் நனவாகிக் கொண்டிருந்தபோது மலேசியா சிங்கப்பூரிலும் ஓவியக் கண்காட்சி நடத்தும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

கண்காட்சிக்கென 37 ஓவியங்களை பலமாதங்கள் எடுத்துக்கொண்டு உருவாக்கினார்.

20 ஆம் நூற்றாண்டு என்ற பொதுத் தலைப்பில் அந்த 37 ஓவியங்களும் உருவாக்கப்பட்டன. புரட்சியின் முதல் தீப்பொறியான லெனின் முதல் நாம் வாழும் காலகட்டத்தில் தமிழனுக்கென ஒரு தனிநாட்டை உருவாக்கிட வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தி வருகின்ற தீப்பிழம்பு பிரபாகரன் வரையில் மொத்தம் 37 ஓவியங்கள்.

அந்த 37 உயிரோவியங்களைப் பற்றி உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் விமர்சித்திருக்கிறார்.

"இருபதாம் நூற்றாண்டு 'ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள்' ஒடுக்கு முறைகளால் மிதிக்கப்பட்ட நூற்றாண்டாய் அதே வேளை ஒடுக்குமுறைகளை மிதித்து நிமிர்ந்த நூற்றாண்டாய் ஓவியர் புகழேந்தியின் 'இருபதாம் நூற்றாண்டு'. வல்லாட்சியர் ஒடுக்கு முறையின் வெறியாட்டமாய் ஹிரோசீமா அணுகுண்டு வெடிப்பு. மாற்றார் அரசு ஒடுக்கு முறையின் உயிர்வேட்டையாய் சாலியன் வாலாபாக் கொலைக்கூத்து. சாதி ஒடுக்கு முறையின் கொடு விளைச்சலால் வெண்மணி உயிர் எரிப்பு. இனவெறி ஒடுக்கு முறையின் விலங்குப் பாய்ச்சலால் குட்டிமணி கண்கள்.. இப்படிப் பல்வகை ஒடுக்கு முறைகளை ஓவியமாக்கியுள்ள புகழேந்தி, மாற்றார் வல்லரசு ஒடுக்குமுறையை மிதித்தெழுந்த காந்தியடிகள், நேதாஜி, முதலாளிய ஒடுக்குமுறையின் முதுகெலும்பை உடைதெறிந்த லெனின், மா, ஓ, காஸ்ட்ரோ, சேகுவேரா. நிற ஒடுக்குமுறையை குழிதோண்டிப் புதைத்த மண்டேலா, சாதி ஒடுக்குமுறைகளுக்கு சாவுமணி அடித்த பெரியார், அம்பேத்கர் இனவெறி ஒடுக்குமுறையின் ஆணிவேர் பிடுங்கிய பிரபாகரன், திலீபன் இப்படித் தலைசிறந்த விடுதலையாளர்களையும் தன் உயிர் வண்ணங்களால் பதிவு செய்திருக்கிறார்.

ஒடுக்கு முறைகளின் பக்கவிளைவாய் ஆங்காங்கே உலகில் தலைவிரித்தாடிய கொடிய வறுமையை பசியை ஓவியர் புகழேந்தியின் நெஞ்சைப் பிழியும் சோமாலியா ஓவியம் உரத்துப் பேசுகிறது. ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த தாகூரும், கார்க்கியும், பாரதியும், பாரதிதாசனும் புகழேந்தியின் தூரிகையில் ஒளிர்கிறார்கள். ஆண்களின் ஒடுக்குமுறையைக் கிழித்தெறிந்து பெண்ணொருத்தி புகழேந்தியின் வீறார்ந்த வண்ணத்திரையில் புயலாய் ஆர்த்தெழுகிறாள்.

இதுதான் புகழேந்தியின் வண்ணங்களில் இருபதாம் நூற்றாண்டு!"
என்று உணர்ச்சி பொங்கிட புகழேந்தியின் ஓவியங்களில் லயித்து வர்ணித்திருக்கிறார் கவிஞர்.

இயற்கையை - அழகை வரையாமல் பிரச்சினைகளை நீங்கள் வரையக் காரணம் என்ன - என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு,

"உலகத்தின் பிரச்சினைகள், சகமனிதர்களின் பிரச்சினைகள் என்னை பாதித்தன. அதை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன. இங்கு சோமாலியா, ஹிரோஷிமா, ஆம்ஸ்ட்ராங் அன்னை தெரசா, மகாத்மா காந்தி எனப் பல ஓவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் பல செய்திகளைச் சொல்லியிருக்கிறேன். உதாரணமாக சோமாலியா, ஹிரோஷிமா போன்ற ஓவியங்களில் அந்த சோகங்களை உரித்தெடுத்திருக்கிறேன். நடப்பதே காந்தியின் வாழ்க்கையாக இருந்ததை அவரது ஓவியம் சுட்டுகிறது.

ஓவியங்கள் பூடகமாக இருக்கலாம் - புரியாமல் இருக்கக்கூடாது. பார்ப்பவரைப் பல கோணங்களில் யோசிக்க வைப்பதே ஓவியங்களின் வேலை. எப்படி ஒரு நல்ல கவிதை படிப்பவர்களை யோசிக்க வைக்கிற புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறதோ, அதே வேலையை எனது ஓவியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று பதிலளித்திருக்கிறார் புகழேந்தி!

இன்னொரு கேள்வி: "கலை கலைக்காகவே என்று சொல்லப்படுகிறது; உங்கள் பார்வை என்ன?"

"கலை என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக, சமூக அவலங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு கவிதை சிறுகதை இலக்கியம் போன்றவை எப்படி சமூக மாற்றத்திற்காகப் பயன்படுகிறதோ அதேபோல ஓவியமும் இதைச் செய்ய முடியும் என்ற ஆழமான நம்பிக்கை எனக்குண்டு. எனவே 'கலை கலைக்காகவே' என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. கலை சமூகத்திற்காகத்தான்!"
என்று உறுதி பொங்கிடக் கூறியிருக்கிறார் ஓவியர் திலகம்.

புகழேந்தி தமது இலட்சியத்தில் மனித நேயமிகுந்த கொள்கைப் பார்வையில் வெற்றி பெற்றிருக்கிறாரா என்பதை இருபதாம் நூற்றாண்டு ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள் என்ற தலைப்பிட்டு அவர் நடத்திய ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற 37 ஓவியங்களும் "இவர் ஒரு சாதனையாளர்; எதிர்காலத்தில் மேலும் உன்னத ஓவியங்களைப் படைத்து ஓவியக் கலைக்கு புதியதோர் மேன்மையையும் திருப்பத்தையும் தருவார்" என்று நிரூபிக்கும் தன்மையதாக அமைந்திருக்கின்றன.

ஒரு நூறு ஆண்டுகளில் நடந்தனவற்றை எல்லாம் எப்படி 37 படங்கள் மூலம் சித்தரித்து விட முடியும்? கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள் என்பது சாத்தியம் என்றால் புகழேந்தி 37 ஓவியங்களில் ஒரு நூற்றாண்டை பதிவு செய்திருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதில் என்ன தயக்கமிருக்க முடியும்?

புகழேந்தி ஓவியர்; ஓவியக்கலையாசிரியர் என்பது மட்டுமல்ல; ஓவியக் கலைக்கே புதிய பெருமைகளையும் உயர்வையும் உன்னதங்களையும் சேர்த்தவர் என்று தமிழ் கூறும் நல்லுலகம் பெருமைப்படலாம், பாராட்டலாம் மகிழ்ச்சி கொண்டாடலாம்!